உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் பிரமுகர்
காணாமல் ஆக்கப்பட்டோர் விசாரணைகளை போல் கானல் நீராக உயிர்த்த ஞாயிறு தாக்குதலும் அமைந்து விடக்கூடாது.அறத்தின் பால் நீதியை நிலை நாட்ட சர்வதேச விசாரணையே அவசியமாகும் ' என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று (12.09.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் சனல் 4 தொலைக்காட்சி அண்மையில் வெளியிட்ட தகவல் குறித்து சர்வதேச நிபுணர்களைக் கொண்டு விசாரிப்பது அவசியமாகும்.
கடந்த காலத்தில் உள்நாட்டு விசாரணைகளின் அறிக்கைகள் எப்படி வெற்றுப் பத்திரமாகக்காணப்பட்டது என்பதை யாவரும் அறிவார்கள்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை விசாரணையின்போது குற்றவாளியே குற்றவாளியை விசாரித்து உண்மையை மறைத்து இனவாதத்தால் வெற்றியீட்டிய கங்காரு நீதிமன்ற முறைமை போல் இவ்விசாரணையும் அமைந்துவிடக்கூடாது.
இந்த நாட்டில் நடுநிலையோடு நீதியை நிலை நாட்ட கூடிய நிபுணத்துவம் உள்ளவர்கள் எவரும் இருப்பதாகத் தெரியவில்லை. அவ்வாறு இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நீதி கிடைத்திருக்கும்.
உண்மை, நேர்மை, சத்தியம் நடுநிலைமை எனும் அற வார்த்தைகள் இலங்கை அரசிற்கு எப்போதும் கசப்பானது. ஏமாற்றுவதிலும் உண்மையை மறைப்பதும் அதனை நீர்த்துப் போகச் செய்வதிலும் மிகப் பெரிய வல்லமையுள்ள ஆட்சியாளர்களைக் கொண்ட நாடு.
ஆகவே, இதற்கு சர்வதேச விசாரணையே பாதிக்கப்பட்ட தரப்பிற்கும் குறிப்பாக ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர்களுக்குரிய நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதற்கும் உலக அரங்கில் பயங்கரவாத ஒழிப்புக்கு உந்துதலாகவும் வெளிப்படைத் தன்மையுடையதாகவும் அமைய வேண்டும் என்பதே யதார்த்தம்.
எனினும் உள்நாட்டு விசாரணைகள் மேற்கொண்டால் நீதியான தீர்ப்பு கிடைக்கப்பெறாது. திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கை மீண்டும் இவ்வாறான தாக்குதல் முயற்சிகள் நிகழா வண்ணம் நீதியான நிலை உருவாக்கப்பட வேண்டும்.
எனவே காணாமல் ஆக்கப்பட்டோர் விசாரணைகளை போல் கானல் நீராக உயிர்த்த ஞாயிறு தாக்குதலும் அமைந்து விடக்கூடாது. அறத்தின் பால் நீதியை நிலை நாட்ட சர்வதேச விசாரணையே அவசியமாகும். என ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.