ஈஸ்டர் தாக்குதல்: நாடகமே அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது! பேராயர்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு முறையான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளும் செயற்படுத்தப்படவில்லை.
மாறாக நாடகமொன்று மாத்திரமே அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக்குவதாகக் கூறியவர்கள் நத்தார் தினத்தன்று மதுபான விற்பனைக்கு அனுமதி கோருகின்றனர்.
இதன்மூலம் நத்தார் தினத்தையும் இழிவுபடுத்துகின்றனர். இதுவா ஆசியாவின் ஆச்சரியம்? இதுவா சுபீட்சத்தின் நோக்கு? என்றும் பேராயர் கேள்வியெழுப்பினார்.
கனேமுல்ல தேவாலயத்தில் நடைபெற்ற ஞாயிறு ஆராதனையின்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் பெரும்பாலான மக்கள் இன்று வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாளுக்கு நாள் வாழ முடியாத சூழல் இந்நாட்டில் உருவாகிக் கொண்டிருக்கிறது. இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக்குவதாக சிலர் கூறியிருக்கின்றனர். எனினும் அதனை செய்யக் கூடியவர் யார் இருக்கிறார் என்பது எமக்கு தெரியாது.
மதத் தலைவர்கள் என்ற ரீதியில் கீழ் மட்டத்தில் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளில் பங்கேற்றால் நாம் செய்வது எமது மதத்தைக் காட்டிக் கொடுப்பதேயாகும். அது மதத் கொள்கைகளை முழுமையாக நாயொன்றுக்கு வீசும் வகையிலான செயற்பாடாகும். நீண்ட காலமாகப் பயின்ற மதக் கொள்கைகளை அரசியல்வாதிகளின் கைக்குட்டையாக்குகின்றோம்.
மதத் தலைமைத்துவம் எப்போதும் சுயாதீனமானதாகக் காணப்பட வேண்டும். தவறுகள் இடம்பெறும்போது அதனை சுட்டிக்காட்டக் கூடிய வகையில் மதத் தலைவர்கள் பலம் மிக்கவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறில்லை என்றால் அவர்கள் அந்த மதத்தை முழுமையாக அறிந்து கொள்ளவில்லை என்றே அர்த்தப்படும்.
தற்போது நாட்டில் பெரும்பாலான அரசியல் கட்சிகளின் மேடைகளில் மதத் தலைவர்கள் அமர்ந்திருப்பது பொறுத்தமான செயல் அல்ல. மதத் தலைவர்களுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்களாக முடியாது. அவர்கள் அரசியலிலிருந்து முழுமையாக வெளியேற வேண்டும். மதத்தலைவர்களது ஒரே கட்சி அவர்கள் கற்ற ஆகமம் மாத்திரமேயாகும்.
அந்த மத தர்மத்திற்காக முன்னிற்க வேண்டும். கிடைக்கக் கூடிய சிறு இலாபங்களுக்காகவும், சுக போகத்திற்க்காகவும் அரசியல் தலைவர்களிடம் மதத் தலைவர்கள் தலைவணங்கக் கூடாது. சுற்றுலாத்துறை அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள சுற்றுலா விடுதிகள் அல்லது ஹோட்டல்களில் நத்தார் பண்டிகையன்று மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. இதுவா ஆசியாவின் ஆச்சரியம்? இதுவா சுபீட்சத்தின் நோக்கு? இது பாரிய குற்றமாகும். நத்தார் தினத்தையும் இழிவுபடுத்துகின்றனர்.
சுற்றுலாத்துறை அமைச்சர் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். வெசாக் தினத்தன்று அதனை தடை செய்தால் , நத்தார் தினத்தன்றும் அதை தடை செய்ய வேண்டும். மதம் என்பது குடி போதைக்கு அடிமையாகி இறப்பதல்ல. கொள்கை ஒன்று காணப்படுமாயின் அந்த கொள்கையைப் பாதுகாக்க வேண்டும். ஒரு மதத்திலுள்ள கொள்கைகள் ஏனைய மதங்களுக்கும் பொதுவானதாகும்.
ஆனால் மதுபானம் குறித்த கோரிக்கையின் பின்னணி இலாப நோக்கு மாத்திரமேயாகும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முறையான செயற்பாடுகள் இதுவரையிலும் முன்னெடுக்கப்படவில்லை.
இதன் பின்னணியில் இருந்தவர்கள் தற்போதும் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர். ஒரு சந்தர்ப்பத்தில் கூட அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. அவர்களது பெயர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் ஒருவர் கூட விசாரணைக்கு உட்டுப்படுத்தப்படவில்லை. ஆனால் நாடகமொன்று மாத்திரமே அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆணைக்குழுவொன்றை நியமித்து, அதற்கு கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கி, ஆயிரக்கணக்கானோர் சாட்சியமளித்துள்ளனர் என்றால், அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துங்கள்.
ஒருசிலர் மாத்திரம் கைது செய்யப்பட்டு, பலர் வெளியில் சுதந்திரமாகவுள்ளனர். இது தொடர்பில் கருத்து தெரிவிக்க வேண்டிய பொறுப்பு எமக்கிருக்கிறது. எவ்வாறிருப்பினும் அரசியல் செயற்பாடுகளிலிருந்து முற்றாக விலகுமாறு மதத் தலைவர்களிடம் மீண்டும் கேட்டுக் கொள்கின்றோம்.
மதத்தின் புனிதம், சுயாதீனத்தன்மை என்பவற்றை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். எந்த கட்சியாக இருந்தாலும் அரசியல்வாதிகளின் கைகுட்டையாக வேண்டிய அவசியம் மதத்தலைவர்களுக்கு இல்லை என்றார்.