போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் முக்கிய உறுப்பினர் மிதிகம சூட்டி நாட்டிற்கு
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் முக்கிய உறுப்பினரும், பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவருமான 'மிதிகம சூட்டி' எனப்படும் 38 வயதுடைய ராஜபக்ச பத்திரணலாகே பிரபாத் மதுசங்க, ஓமானிலிருந்து விசேட பொலிஸ் குழுவினரால் இன்று (30) நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
கொலைகள், கொள்ளைகள், சட்டவிரோத துப்பாக்கி பயன்பாடு மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கையின் பல நீதிமன்றங்களில் இவர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சர்வதேச சிவப்பு எச்சரிக்கை
இவரைக் கைது செய்வதற்காக இலங்கை பாதுகாப்புப் பிரிவினரால் சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஓமானில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த வேளையில், அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டார்.
இலங்கை பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று ஓமானின் மஸ்கட் நகருக்குச் சென்று, இன்று அதிகாலை 04.27 மணியளவில் 'சலாம் எயார்' சேவைக்குச் சொந்தமான OV-437 ரக விமானம் மூலம் இவரைக் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
விமான நிலையத்தில் வைத்து இவரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்