யாழில் போதைப்பொருள் விற்பனை ; விசேட சுற்றிவளைப்பில் கும்பல் கைது
யாழ் நகரப் பகுதியில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கும்பலொன்று கைது செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய, நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பிரதான சந்தேகநபர்கள் உட்பட மொத்தம் எட்டு பேர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
பிரதான சந்தேகநபர்கள் இருவரிடமிருந்தும் முறையே 6 கிராம் மற்றும் 2 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஏனையவர்களிடமிருந்து சிறியளவிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் யாழ். நகர் மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.