போதை பொருள் கடத்தல் விவகாரம் ; மரண தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம்
இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பாரிய போதைப்பொருள் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (21) உறுதி செய்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு, ‘புத்திம’ எனும் மீன்பிடிப் படகில் மீனவர்கள் போன்று வேடமணிந்து 151 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்திய குற்றத்திற்காகவே இவர்களுக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு, கட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த சமிந்த ரோஹன, அன்டன் கிறிசாந்த, துலாக் ரவீந்திர, லியனாதுரகே சுரங்க மற்றும் தரிந்து ஜயந்த ஆகிய 5 பேர், தென் கடல் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இது அப்போது கடற்படையால் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகையாகப் பேசப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையில், கடந்த 2023ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றம் இவர்களுக்கு மரண தண்டனை விதித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதியரசர்களான பிரதீப் ஹெட்டியாரச்சி மற்றும் பி. குமாரரத்தினம் ஆகியோர் அடங்கிய அமர்வு, மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட எந்தக் காரணமும் இல்லை எனக் கூறி, கீழ் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை உறுதிப்படுத்தி உத்தரவிட்டுள்ளது.