போதைப்பொருள் உற்பத்தி; உறுப்பினர் பதவியை பறித்த மொட்டு கட்சி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினரான சம்பத் மனம்பேரியின் கட்சி உறுப்பினர் பதவியை இடைநிறுத்தியுள்ளது.
போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இராசாயனங்களை சம்பத் மனம்பேரி வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநீக்கம்
அங்குணகொலபெலஸ்ஸ தலாவைச் சேர்ந்த மனம்பேரி உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
இதுபோன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் நபர்களுக்கு எதிராக கட்சி கடுமையான கொள்கையை கடைப்பிடிக்கிறது.
அத்துடன், குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என்றும், பொதுமக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த விசாரணைகள் விரைவில் முடிவடையும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தலாவ, மெத்தெனியவில் உள்ள ஒரு இடத்தில் ஐஸ் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் சுமார் 50,000 கிலோகிராம் ரசாயனங்களை மறைத்து வைத்ததாக மனம்பேரி மற்றும் அவரது சகோதரர் பியால் மனம்பேரி மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இதனையடுத்து இருவரும் அப்பகுதியை விட்டு வெளியேறிவிட்டதாகவும், விசாரணைகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.