இந்திய பயணிகளுடன் சென்ற சாரதிக்கு நேர்ந்த அசம்பாவிதம்
இந்திய பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் ஓட்டுநர், குளவித் தாக்குதலுக்குள்ளாகிய சம்பவம் இன்று (06) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி நான்கு இந்திய நாட்டவர்களுடன் பயணித்த வேன் நானுஓயா ரதெல்ல குறுக்கு வழியில் நிறுத்தி பயணிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது, வீதியின் அருகே ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்த குளவி கூடு கலைந்துள்ளது.
குளவி தாக்குதல்
பின்னர், பயணிகளை வேனில் ஏற்றி, ஓட்டுநர் வேனில் ஏறத் தயாராகிய போது குளவிகள் ஓட்டுநரை தாக்கியுள்ளன.
கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற நானுஓயா பொலிஸார், சம்பவ இடத்தை ஆய்வு செய்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட ஓட்டுநரின் நிலை மோசமாக இல்லை என தெரிவித்தனர்.
மேலும் நுவரெலியாவுக்கு சென்று மருத்துவ சிகிச்சை பெறுவதாக ஓட்டுநர், பொலிஸாரிடம் கூறியதையடுத்து இந்திய நாட்டவர்களையும் அதே வேனில் நுவரெலியா வரை அனுப்ப பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.