வைத்தியர் அரச்சுனா விவகாரம்... ஆளுநருக்கு எதிராக நபரொருவர் வெளியிட்ட பதிவு!
பதவியிலமர்த்தப்பட்ட வைத்திய அத்தியட்சகர் ஒருவர் பணியிலிருக்கும்போது அதற்கு இன்னொரு வைத்திய அத்தியட்சகர் உரிமை கோரி அவரது கதிரையை பிடுங்கி உட்காருகிறார்.
இதற்குக் காவல்துறை பாதுகாப்பு வழங்குகிறது. போதாக்குறைக்கு ஊடகத்தார் (Android Phone தூக்கிறவர் எல்லோரும் இப்போ ஊடகத்தார்) அதனை நேரலை செய்கிறார்கள்.
எங்கள் வருங்கால இளைஞர்களுக்கு நல்ல முன்னுதாரணம்? ஆளுநரே! மாகாணச் சுகாதாரப் பணிப்பாளரே! பிராந்திய சுகாகாதாரப் பணிப்பாளரே! இதுதான் உங்கள் நிர்வாக ஆளுமையின் இலட்சணமா? நியமன செய்யப்பட்ட ஒருவரின் பதவியை வெறிதாக்காது இன்னொருவருக்கு எவ்வாறு நியமனம் வழங்கப்பட்டது.
அவசிய தேவை கருதி மேற்கொள்ளப்பட்டிருப்பின் அதனை வலிதாக்க தாங்கள் மேற்கொண்ட தொடர் நடவடிக்கை என்ன?
வருவேன், புறப்பட்டுவிட்டேன், இப்போது முறிகண்டி, என்று நேரலையுடன் வந்து, தங்களால் ஆரவாரத்துடன் கொண்டுவந்து பணிக்கமர்த்தப்பட்டவரின் பணிக்கும் கௌரவத்துக்கும் ஊரெல்லாம் காண்பித்து இழுக்கு ஏற்படுத்தப்பட்டபோது நீங்கள் எங்கே இருந்தீர்கள்?
அவ்வைத்தியருக்கு ஏற்படுத்தப்பட்ட இழுக்கு அவரது பணிக்காலம் முழுவதும் தொடரப்போவது பற்றி உங்களுக்குக் கவலையோ அக்கறையோ இல்லை.
உங்கள் பலவீனங்களை மற்றவர் தலையில் சுமத்திவிட்டு தப்பிவிடுவதுதான் உங்கள் பணியா? நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பணியை ஒழுங்காகச் செய்து வந்திருந்தால் இவ்வாறான பிரச்சினைகள் எழாது தடுத்திருக்க முடியுமல்லவா?
வைத்தியர் அர்ச்சுனாவினால் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அரச்சுனாவால் மேற்கொள்ளப்பட்ட பணி முறைகேடுகள் தொடர்பாக தாங்கள் இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?
நீங்கள் உங்கள் பணியை நேர்த்தியாகச் செய்திருந்தால் அரசியல்வாதியுன் வீட்டில் அவரது எடுபிடிகளின் முன் தலையைக் குனிந்து கொண்டிருக்க வேண்டியதில்லையே.
உங்களின் தலைகுனிவு என்பது உங்கள் துறையில் நேர்மையாகப் பணிபுரிபவர்களுக்கு மட்டுமல்ல ஏனைய துறைகளிலுள்ள அதிகாரிகளுக்கும் தலைகுனிவு என்பதை நீங்கள் உணரமாட்டீர்கள்.
பதவி என்பது வெறும் பெயரினால் அல்ல செய்யும் பணியினால்தான் பெருமை பெறும் என்பதை இனி நீங்கள் உணர்ந்தும் பயனில்லை.
ஆளுநர் அவர்களே! உங்கள் நியமனம் அரசியல் நியமனம் என்பதும் நீங்கள் அதனைத் தந்தவர்களுக்கே எப்போதும் விசுவாசமாகச் செயற்படுவீர்கள் என்பதும் அறிந்ததே.
துர்க்காபுர அந்தரக்கத்தைப் பூதக்கண்ணாடி கொண்டு பார்த்த உங்களுக்கு அன்றாடம் உங்கள் கைப்பேசியிலும் வீட்டுக் காணொலியிலும் வந்த அசிங்கங்கள் உங்கள் கண்ணில் படவில்லையா? அல்லது உங்கள் எஜமானர்கள் உங்கள் கண்களை மூடிக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்களா?
பதவிக்குரிய கடமைகளைச் செய்யாமலும் எதிரானவற்றைச் செய்துகொண்டும் இருப்பதை விட அதனைத் துறந்துவிடுவதே பெருமை என முகநூலில் கந்தையா அருந்தவபாலன் என்பவர் இந்த பதிவை பதிவிட்டுள்ளார்.