அசாத் மௌலானாவை தொடர்புபடுத்தி களங்கம் ஏற்படுத்த முயற்சி - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த டக்ளஸ்
தேர்தல் காலங்களில் வழக்கமாக தமக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சேறடிப்பு பிரசாரங்கள், இந்த முறை தேர்தலுக்கு முன்பாகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள கசியின் தலைமை அலுவலகத்தில் சமகால அரசியல் குறித்து ஊடக சந்திப்பை முன்னெடுத்திருந்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் காலங்களில் நடக்கும் சேறடிப்புகள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வழக்கமாக தேர்தல் காலங்களில் எமக்கெதிராக முன்னெடுக்கப்படும் சேறடிப்புக்கள் தற்போது தேர்தலுக்கு முன்பதாகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அரசியல் ரீதியாக எம்மை பலவீனப்படுத்த வேண்டும் என்ற நப்பாசையில் அவ்வப்போது செய்திகளை வெளியிட்டு வருகின்ற சில பத்திரிகைகள் தற்போதும் தவறான தகவல்களை வெளியிட்டு வருகின்றன.

இதற்கமைய, சமீப நாட்களில் பிரபல பத்திரிகையில் வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது போன்று தீவகத்தில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பாக விசாரணைகள் எவையும் மேற்கொள்ளப்பட வில்லை. பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்ளவும் இல்லை, யாரும் எமது அலுவலகத்திற்கு வரவும் இல்லை.
விமர்சனங்களுக்கு பதிலடி
சமூக மற்றும் கூட்டு மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அருட்தந்தை ரண்முனி ஜீட் வர்ணன் றொஹான் சில்வா என்பவர் குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதாவது, அசாத் மௌலானா சனல் 4 தெலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் சொல்லப்பட்ட விடயங்களின் உண்மைத் தன்மைமை உறுதிப்படுத்துமாறு குறித்த முறைப்பாட்டில் சொல்லப்பட்டுள்ளது.

அந்தவகையில், என்னுடன் தனக்கு தொடர்பு இருந்ததாக அசாத் மௌலானா சொல்லியிருந்தவை தொடர்பான எனது வாக்குமூலத்தை பெற்றுக்கொள்வதற்காகவே அழைக்கப்பட்டிருந்தேன்.
இதுதொடர்பான சில உறுதிப்படுத்தப்படாத தகவலை அறிந்து கொண்ட குறித்த பத்திரிகை, எமக்கு களங்கத்தை ஏற்படுத்தி பலவீனப்படுத்துவதற்கான தமது வழக்கமான விளையாட்டை வெளிப்படுத்தியுள்ளனர் என்றார்.