நாம் சண்டித்தனம் காட்டியதனாலேயே வீடு சென்றோம்!
ஆளும் கட்சிக்கு எச்சரிக்கை தாம் சண்டித்தனம் காட்டியதனால் ஆட்சியில் இருந்து தோற்கடிக்கப்பட்டு வீடு செல்ல நேர்ந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்க நாடாளுமன்றில் ஒப்புக்கொண்டுள்ளார்.
எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள தொழிற்சங்க போராட்டம் தொடர்பில் அவர் கருத்து வெளியிடும் போது இதனை வலியுறுத்தியுள்ளார்.
30 ஆம் தேதி நடைபெறவுள்ள தொழிற்சங்க போராட்டத்தை அடக்குமுறைகளை கொண்டு தடுக்க முயற்சித்தால் அது வெற்றி அளிக்காது என சுட்டிக்காட்டி உள்ளார்.
தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தாக்க முடியாது, அவ்வாறு தாக்கியதன் காரணமாகவே இன்று ஜேவிபி அல்லது திசைகாட்டி அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
தாம் உள்ளிட்டவர்கள் காட்டிய சண்டித்தனங்களால் தான் அவ்வாறான ஒரு அரசாங்கம் தேவையில்லை எனக் கூறி மக்கள் ஜேவிபியை ஆட்சி பீடம் ஏற்றினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களே அதிக அளவில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தார்கள் என தெரிவித்துள்ளார். அண்மையில் தலை கவசத்துடன் பௌத்த பிக்குகளை தாக்கினார்கள், அவ்வாறு தாக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கப் போராட்டம் செய்பவர்களை அச்சுறுத்தி ஆட்சி செய்ய முடியாது எனவும் அவ்வாறு ஆட்சி செய்தால் அந்த ஆட்சி நீண்ட காலத்திற்கு நீடிக்காது எனவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு காலி முகத்திடலில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு வழக்கு தொடரப்பட்டுள்ளதை நினைவில் கொள்ளுமாறு சாமர சம்பத் தசநாயக்க அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.