என்னை இனி அப்படி கூப்பிடாதீர்கள்; கமல் போட்ட கண்டிஷன்!
நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன், உலக நாயகன் உள்ளிட்ட அடமொழிகளைத் துறப்பதாக திடீரென அறிவித்துள்ளார். அதன்படி , தன்னை இனி ‘கமல்ஹாசன்’ அல்லது ‘KH’ என்று அழைத்தாலே போதும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (11) தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது,
என் மீது கொண்ட அன்பினால் ‘உலக நாயகன்’ உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள். மக்கள் கொடுத்து சக கலைஞர்களாலும், ரசிகர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இப்படிப்பட்ட பாராட்டுச் சொற்களால் மகிழ்ந்திருக்கிறேன். சினிமாக் கலை, எந்தவொரு தனி மனிதனையும் விட பெரியது.
அந்தக் கலையில் மேலும் மேலும் கற்றுக் கொண்டு பரிணாமம் அடைய விரும்பும் ஒரு மாணவன் தான் நான். பிறக் கலைகளைப் போலவே சினிமாவும் அனைவருக்குமானது அனைவராலும் ஆனது.
திறமையான கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், நல்ல ரசிகர்கள் ஒன்றிணைந்துதான் சினிமா உருவாகிறது. கலையை விட கலைஞன் பெரியவன் இல்லை என்பது என் ஆழமான நம்பிக்கை.
கற்றது கைமண் அளவு என்பதை உணர்ந்தவனாகவும், தொடர்ச்சியான முன்னகர்வில் நம்பிக்கை கொண்டு உழைத்து உயர்பவனாகவும் இருப்பதே எனக்கு உவப்பானது. அதனால்தான் நிறைய யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வர நேர்ந்தது.
மேலே குறிப்பிடதுபோன்ற பட்டங்களையும், அடைமொழிகளையும் வழங்கியவர்களுக்கு எந்த மரியாதைக்குறைவும் வந்துவிடாத வண்ணம், அவற்றைத் துறப்பது என்பதே அது.
எனவே என் மீது பிரியம் கொண்ட அனைவருக்கும் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். இனிவரும் காலத்தில் என் ரசிகர்களும், ஊடக நண்பர்களு, திரைத்துறையச் சார்ந்தவர்களும், மக்கள் நீதி மய்ய கட்சித் தொண்டர்களும், சக இந்தியர்களும் என் கமல்ஹாசன் என்றோ கமல் என்றோ KH என்றோ குறிப்பிட்டால் போதுமானது என்று கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்