ரிஷாத்துக்கு பெற்றோர்கள் என்ற உணர்வு இல்லையா? சபையில் பெண் எம்.பி காட்டம்!
ரிஷாத் பதியுதீனுக்கும் பிள்ளைகள் உள்ள நிலையில் அவர்களுக்கு பெற்றோர்கள் என்ற உணர்வு இல்லையா? என ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே, சபையில் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர்களின் வீட்டில் இவ்வாறான குற்றங்கள் இடம்பெறுகின்றன என்பதனைத் தெரிந்து கொண்டும் எப்படி அவரால் இருக்க முடிந்தது எனவும் சபையில் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே கடுமையாக சாடினார்.
அத்துடன் ஹிசாலினியின் மரணத்துக்கு அவரது பெற்றோர், ரிஷாத் பதியுதீன் மற்றும் குற்றவாளிகள் சகலரும் பொறுப்புக் கூறியாக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
நாடாடளுமன்றத்தில் இன்று இலங்கை மத்திய வங்கியின் 2020ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை குறித்த சபை ஒத்திவைப்பவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவற்றை கூறினார்.
மேலும் அப்பாவி சிறுமி ஒருவரின் மரணம் இன்று நாட்டில் பாரிய முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளன, அந்த சிறுமி எவ்வாறு இறந்தார் என்பது எமக்கு தெரியவில்லை என்றும் ஆனால் சர்வதேச ரீதியிலும் இது நாட்டிற்கு பாரிய சிக்கலை ஏற்படுத்தும் காரணி என்றும் ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே சபையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது