இரண்டாவது நாளாகவும் தீவிரமடையும் கிழக்கு மாகாண வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு
அம்பாறை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைப் பணிப்பாளரை இடமாற்றம் செய்யக் கோரி, கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியர்கள் இரண்டாவது நாளாகவும் இன்றும் தொடர்ந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடந்த சில மாதங்களாகத் தொடர்ச்சியாக நிர்வாகச் சீர்கேடுகள் இடம்பெற்று வருவதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இதனையடுத்து, வைத்தியசாலைப் பணிப்பாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரி மனித உரிமை அமைப்புகளினால் கடந்த 4 ஆம் திகதி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வைத்தியசாலையில் இடம்பெற்றுவரும் வன்முறைப் போக்கை உடனடியாக நிறுத்துமாறும், நோயாளிகளின் உயிரோடு விளையாடுவதாகக் குற்றஞ்சாட்டப்படும் வைத்தியசாலைப் பணிப்பாளரை அதிகாரத்திலிருந்து உடனடியாக நீக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, அக்கரைப்பற்று வைத்தியசாலையில் நிலவும் நிர்வாகச் சீர்கேடுகள் தொடர்பில் கடந்த 4 ஆம் திகதி ஜனாதிபதிக்கும் மகஜர் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று காலை முதல் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இப்போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்வதால், அனைத்து வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற வந்த மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, கிளினிக்குகளுக்காக வருகை தந்த மக்கள், வைத்திய சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.