பணியாளர்களை ஜாதகம் பார்ப்பதற்கு அழைத்து சென்ற வைத்தியர்
வைத்தியசாலை பணியாளர்களை அரச அம்புலன்ஸ் வண்டியில் ஜாதகம் பார்ப்பதற்காக அழைத்துச்சென்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் தென் மாகாணத்தில் இடம் பெற்றுள்ளது.
அத்தோடு குற்றம் சாட்டப்பட்ட வைத்தியருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சந்திம சிறிதுங்க நேற்று (21) அறிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை (17) காலை ஐந்து பேர் கொண்ட குழுவொன்று உத்தியோகபூர்வ உடைகளை அணிந்து சுமார் 40 கிலோமீற்றர் தூரம் பயணித்து ஜாதகம் பார்க்க சென்றுள்ளனர்.
சம்பவம்
இதன்போது பாடசாலையொன்றிற்கு அருகில் உள்ள ஜோதிட நிலையத்திற்கு முன்பாக சுமார் 02 மணித்தியாலங்களாக அம்புலன்ஸ் வண்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அவதானித்த சிலர் அம்புலன்ஸ் வண்டியினை புகைப்படம் மற்றும் காணொளி எடுத்துள்ளனர்.
இதன்போது பாடசாலைக்கு மருந்தை கொண்டுவந்ததாக தெரிவித்து ஊழியர்கள் திரும்பிச்சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து அதிபரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவ்வாறு பாடசாலைக்கு மருந்து எவையும் கொண்டு வரப்படவில்லையென தெரிவித்துள்ளார்.
மேலும் நோயாளிகளின் சேவைக்காக பயன்படுத்தப்படும் அரச வாகனங்களை இவ்வாறு அனுமதியின்றி பயன்படுத்தியமை முற்றிலும் தவறு எனவும், இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்படும் என்றும் தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சந்திம சிரிதுங்க அறிவித்துள்ளார்.