பெண் புற்றுநோயாளி மீது மருத்துவர் ஈவிரக்கமின்றி தாக்குதல்
கம்பளை போதனா மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவரினால், சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், குறித்த மருத்துவரை இன்று (19) கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக குருந்துவத்த காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குருந்துவத்த நகரில் பால் விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வரும் பெண்ணொருவர், கம்பளை மருத்துவமனை மருத்துவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் தாக்கப்பட்ட நிலையில் குருந்துவத்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினாலும் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில், சந்தேகத்துக்குரிய மருத்துவரின் மனைவி, மாமியார் மற்றும் மகள் ஆகியோரும் ஈடுபட்டுள்ளமை காணொளி ஆதாரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சந்தேகத்திற்குரிய மருத்துவர் இதற்கு முன்னர் குருந்துவத்த மருத்துவமனையில் பதில் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றியுள்ளார். அந்த காலகட்டத்தில் அங்கிருந்த நிரந்தர பொறுப்பதிகாரி மருத்துவருடன் ஏற்பட்ட தொழில்முறை முரண்பாடு காரணமாகவே அவர் கம்பளைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார்.
அதன் பின்னரும், பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் தனியார் மருத்துவ சேவைகள் தொடர்பில் அவ்விரு மருத்துவர்களுக்கும் இடையில் நீண்டகாலமாகப் பகைமை இருந்து வந்துள்ளது.
நேற்று (18) காலை, குருந்துவத்த மருத்துவமனையின் பொறுப்பதிகாரியான மருத்துவரும் அவரது மனைவியும் பாதிக்கப்பட்ட பெண்ணின் கடைக்கு தேநீர் அருந்தச் சென்றபோது, அதற்கு அருகில் சந்தேகநபரான மருத்துவரின் வீட்டில் இருந்தவர்கள் அவர்களை நோக்கி கூச்சலிட்டு அவமதித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கம்பளையிலிருந்து வாகனத்தில் விரைந்து வந்த சந்தேகநபரான மருத்துவர், தனது குடும்பத்தினருடன் இணைந்து கடையிலிருந்த பெண்ணுடன் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.
சம்பவத்தின் போதே குறித்த பெண் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.சம்பவம் குறித்து குருந்துவத்த காவல்துறை விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சந்தேகநபரான மருத்துவர் இன்று (19) கம்பளை மருத்துவமனையில் கடமையில் இருப்பதாகத் தெரிவித்துள்ள குருந்துவத்த காவல்துறை பொறுப்பதிகாரி நந்தன பண்டார, அவரது பணி நிறைவடைந்ததும் அவரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிப்படுத்தினார்.