பொரித்த எண்ணெயையே மீண்டும் பயன்படுத்துகிறீர்களா? காத்திருக்கும் ஆபத்து!
பலரது வீட்டில் ஒருமுறை சமையலுக்கு பயன்படுத்திய எண்ணெய் மீந்து விட்டால் நிச்சயம் மீண்டும் ஒருமுறை அல்லது அது தீரும் வரை பயன்படுத்துவது இன்றளவும் வழக்கமாக உள்ளது.
பஜ்ஜி,சிப்ஸ், பக்கோடா, பொரியல் என எதற்காக பயன்படுத்தப்பட்ட எண்ணெயாக இருந்தாலும் மீண்டும் அதை நாம் பயன்படுத்துகிறோம். ஆனால் சமைத்த எண்ணெயை மறுமுறை பயன்படுத்தலாமா என்றால் பெரும்பாலான நிபுணர்களின்பதில் கூடாது என்றுதான் கூறுகின்றனர்.

ஒருமுறை பயன்படுத்திய எண்ணையை கொண்டு மீண்டும் மீண்டும் பயன்படுத்தி உணவுகளை தயாரிப்பது தேவையற்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்த கூடும். அவ்வாறு பயன்படுத்துவது பல நோய்களுக்கு வழிவகுக்கும்.
அத்துடன் இவை உடலில் கெட்ட கொழுப்புகளை உருவாக்குகின்றதாகவும் இதன் காரணமாக புற்றுநோய்க்கும் வழிவகுக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதோடு இந்த எண்ணெய் இது இதய நோய், அல் ஜெய்மர் மற்றும் பார்கின்சன் நோய்க்கு வழிவகுக்கும்.
அதுமட்டுமல்லாது சமையல் எண்ணெய்களை அதிகமாக கொதிக்க வைப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் எனவும் சொல்லப்படுகின்றது.

எனினும் சமைத்த பிறகு, மீதமுள்ள எண்ணெயை குளிர்வித்து, அதன்பின்னர் வடிகட்டி காற்று புகாத கொள்கலனில் ஊற்றி பயன் படுத்த முடியுமென சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதோடு எண்ணெயை மறுசுழற்சி செய்வதற்கு முன்பு ஒவ்வொரு முறையும் எண்ணெயின் நிறம் மற்றும் தடிமன் சரிபார்க்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இவ்வாறு செய்வதால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம் என அவர்கள் கூறினாலும், ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தாமல் இருப்பதே நம் ஆரோக்கியத்திற்கு நல்லது.