இந்நூற்றாண்டுக்கான பறவை எது தெரியுமா?
நூற்றாண்டிற்கான பறவையாக நியூசிலாந்தின் Forest and Bird அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் புயூட்கெடெக் எனும் பறவை தெரிவாகியுள்ளது.
சுற்றுச்சூழலை காப்பதில் முன்னணியில் உள்ள காடுகள் மற்றும் பறவைகள் ஆர்வலர்களின் Forest and Bird அமைப்பு Bird of the Century என்ற பெயரில், "நூற்றாண்டிற்கான பறவை" எது என்பதை தேர்ந்தெடுக்க ஒரு போட்டியை நடத்தி வருகிறது.
பொதுமக்கள் பலரும், பறவைகள் ஆர்வலர்களும் இதில் பங்கேற்பது வழக்கம். இப்போட்டி 2005 ஆம் ஆண்டில், உலகில் அரிதாகி வரும் பறவைகள் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது.
இவ்வருடம் சுமார் 200 நாடுகளில் இருந்து பலர் பங்குபெற்று 3.5 இலட்சம் பேர் வாக்களிப்பில் கலந்துகொண்டனர். அதிகம் பேர் பங்கேற்றதால் வாக்களிப்பும், அதன் தொடர்ச்சியாக முடிவுகளும் தாமதமானது.
பங்கேற்றவர்களின் முடிவுகளில், இறுதியாக புயூட்கெடெக் எனும் பறவை இந்த நூற்றாண்டிற்கான பறவை என தெரிவானது.
முதலிடம் பெற்ற பறவை
முதலிடம் பெற்ற இப்பறவை Australasian Crested Grebe என்றும் அழைக்கப்படுகிறது. வாக்களிப்பில் ஆரம்பத்தில் இந்த பறவை பட்டியலில் பின் தங்கியிருந்தது.
ஆனால், அதன் பிரத்தியேக தோற்றமும், வீட்டில் வளர்ப்பதற்கு ஏற்ற குணாதிசயங்களும் வாக்காளர்கள் மனதில் மாற்றத்தை உண்டாக்கி, இதனை பட்டியலில் மெல்ல மெல்ல முன்னேற்றி இறுதியில் அதற்கே முதலிடம் கிடைத்தது.
ஏரிகளில் காணப்படும் பறவை வகையை சேர்ந்த புயூட்கெடெக் உலகில் தற்போது 3,000-இற்கும் குறைவாகவே உள்ளது. புயூட்கெடெக் இற்கு 2,90,374 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.
நியூசிலாந்தின் கிவி பறவை 12,904 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளதுடன், உலகின் அறிவார்ந்த பறவை எனப்படும் கிளி வகையை சேர்ந்த Kea 12,060 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது.
"2023 ஆம் ஆண்டில், இந்த நூற்றாண்டின் பறவையாக புயூட்கெடெக் தகுதி பெறுகிறது, ஏனெனில் அவற்றின் எண்ணிக்கை மெதுவாக அதிகரித்து வருகிறது.
அச்சுறுத்தலுக்குள்ளாகி அரிதாகி வரும் பறவை இனங்களுக்கு உதவினால், மீண்டும் அவை பெருகும்,'' என தெரிவுக்குழு தெரிவித்துள்ளது.
நியூசிலாந்தை பூர்வீகமாகக் கொண்ட புயூட்கெடெக் எனும் நீர் பறவைகள் விசித்திரமான சத்தங்களை எழுப்பக்கூடியவை.