விதைகளை எப்படி சாப்பிட்டால் முழு சத்து கிடைக்கும் என தெரியுமா?
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஏராளமான உணவுகளை இயற்கை நமக்கு அளித்துள்ளது. விதைகளில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான நன்மைகளை அளிக்கக்கூடியவை.
இதனால் தற்போது நிறைய மக்கள் தங்களின் ஸ்நாக்ஸ் வேளைகளில் விதைகளை தினசரி உணவில் சேர்த்து வருகின்றனர். விதைகளை சாப்பிடுவதாக இருந்தால், அவற்றை சரியான முறையில் சாப்பிட்டால் தான் அதில் உள்ள முழு சத்துக்களைப் பெற முடியும்.
சியா விதைகள்
சியா விதைகளில் நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரோட்டீன் மற்றும் பல்வேறு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இந்த விதைகளை தினசரி உணவில் சேர்த்து வந்தால், இதய ஆரோக்கியம் மேம்படும், இரத்த சர்க்கரை கட்டுப்படும், செரிமானம் மேம்படும் மற்றும் எடை இழப்புக்கு உறுதுணையாக இருக்கும். இந்த "சியா விதைகளை நீரில் ஊற வைத்து சாப்பிடுவது தான் சிறந்தது"
சூரிய காந்தி விதைகள்
சூரியகாந்தி விதைகளில் ஒலீயிக் மற்றும் லினோலியிக் அமிலம் அதிகமாகவும், சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் மற்றும் சோடியம் குறைவாகவும் உள்ளன. அதோடு இதில் மக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து போன்றவையும் உள்ளன. இந்த விதைகளை தினசரி உணவில் மிதமான அளவில் சேர்த்து வந்தால், இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகள் கட்டுப்பாட்டில் இருக்கும் மற்றும் இதய ஆரோக்கியம் மேம்படும். இந்த "சூரியகாந்தி விதைகளை வறுத்து சாப்பிடுவது தான் சிறந்தது"
ஆளி விதைகள்
ஆளி விதைகளில் நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், லிக்னன்கள் போன்றவை அதிகம் உள்ளன. இந்த விதைகளை தினசரி உணவில் சேர்த்து வரும் போது, செரிமானம் மேம்படும், கொலஸ்ட்ரால் குறையும், குறிப்பிட்ட வகையான புற்றுநோய்களின் அபாயம் குறையும் மற்றும் எடை இழப்புக்கு உதவியாக இருக்கும். இந்த "ஆளி விதைகளை அரைத்து பொடியாக உட்கொள்வது தான் சிறந்தது"
சோம்பு
சோம்பு ஏராளமான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய ஒரு அருமையான விதை. இந்த விதையில் நார்ச்சத்து, வைட்டமின்களான வைட்டமின் சி, பி வைட்டமின்கள், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் மக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளது. இது தவிர இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் மற்றும் கலோரிகள் குறைவு. இந்த "சோம்பு விதைகளை அப்படியே வாயில் போட்டு மென்று சாப்பிடுவது நல்லது"
பூசணி விதைகள்
பூசணி விதைகளில் மக்னீசியம், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புக்கள் வளமான அளவில் நிறைந்துள்ளன. இந்த பூசணி விதைகளை தினசரி உணவில் சிறிது சேர்த்து வந்தால், இதய ஆரோக்கியம் மேம்படும், செரிமானம் சிறப்பாக இருக்கும், நோயெதிர்ப்பு சக்தி மேம்படும், நல்ல தூக்கம் கிடைக்கும் மற்றும் எலும்புகள் வலுவடையும். இந்த "பூசணி விதைகளை சூரியகாந்தி விதைகளைப் போன்றே வறுத்து உட்கொள்வது நல்லது"