15 ஆண்டாக பஸ்ஸில் திருடிய திமுக ஊராட்சி தலைவி!
பணம், புகழ், வசதிகள் வந்த போதிலும், மகிழ்ச்சிக்காக, 15 ஆண்டுகளாக திருட்டு தொழிலில் ஈடுபட்டு வருகிறேன்' என, செயின் பறிப்பு வழக்கில் கைதான, திமுக ஊராட்சி தலைவி வாக்குமூலம் அளித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்தவர் வரலட்சுமி, (வயது 50). இவர், காஞ்சிபுரத்தில் இருந்து அரசு பஸ்சில் சென்னை திரும்பிய போது, அவரது 5 சவரன் நகையை பெண் ஒருவர் திருடியுள்ளார்.
திருடும் போது கிடைக்கும் மகிழ்ச்சி
கோயம்பேடு பொலிஸார் விசாரித்து, திருப்பத்துார் மாவட்டம் நரியம்பட்டு ஊராட்சி தலைவரான, தி.மு.க.,வைச் சேர்ந்த பாரதி,(வயது 51), என்பவரை கைது செய்தனர். பொலிஸாரிடம் ,
நான், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்துார், வேலுார், கிருஷ்ணகிரி என பல இடங்களில், ஓடும் பஸ்களில், பெண்களின் கவனத்தை திசை திருப்பி, நகை திருடி உள்ளேன். நல்லவள் போல குழந்தைகளுடன் பேச்சு கொடுத்து, நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளேன்.
கடந்த 15 ஆண்டுகளாக, திருட்டு தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். திருடிய நகை களை விற்று கிடைத்த பணத் தில், சொந்த ஊரில் வணிக வளாகம் கட்டி உள்ளேன். ஊராட்சி தலைவியான பின், திருட்டு தொழிலை விட்டு விடும்படி உறவினர்கள் கூறினர்.
என்னால் திருடும் பழக்கத்தை விட முடியவில்லை. பணம், புகழ், வசதிகள் வந்த பின்னரும், திருடும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்காக, இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். 'இனி திருடவே கூடாது' என, ஒவ்வொரு நாளும் சபதம் எடுப்பேன்.
ஆனால், திருடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், நான் தோற்று விடுவேன். என் திருட்டு பழக்கத்தால் கூனி குறுகி நிற்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள் என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்நிலையில் மக்களை பற்ரி கவலைப்படாது திமுக ஊராட்சி தலைவி திருடி வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.