அசெளகரியத்திற்கு உள்ளான பெண்: பொலிஸ் பரிசோதருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி கடந்த வெள்ளிக்கிழமை (10-03-2023) இரவு பயணித்த புகையிரத கழிவறையினுள் பச்சிளம் கைக்குழந்தை அநாதரவான நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் பண்டாரவளை தலைமையகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகரிடம் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினால் விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கழிவறையினுள் பச்சிளம் கைக்குழந்தையை விட்டுச் சென்ற பெண்ணை பண்டாரவளை தலைமையக பொலிஸார் கைது செய்யும் போது பொலிஸ்மா அதிபரினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை பின்பற்றாத காரணத்தினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணை கைது செய்த போதும், சந்தேக நபரிடம் விசாரணை நடத்திய போதும், விசாரணையின் விபரங்களை கருத்திற் கொள்ளாமலும் சந்தேக நபரான பெண்ணை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியதாக பண்டாரவளை தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குழந்தைகள் மற்றும் பெண்கள் தொடர்பில் எவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட பொலிஸ் பரிசோதகர் செயற்பட தவறியதன் காரணமாக உடனடியாக விசாரணையை ஆரம்பிக்குமாறு பொலிஸ் தலைமையகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருக்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.