சாவகச்சேரியில் தனியார் சிலரால் ஏற்பட்டுள்ள அவலநிலை!
தனியார் சிலர் இராமாவில் கிராமசேவகர் பிரிவு மற்றும் தாவளை இயற்றாளை கிராமசேவகர் பிரிவின் எல்லை தெருவை அடைத்து வைத்துள்ளமையால், பயணம் செய்ய முடியாத மக்கள் மிகவும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனால் இம் மக்கள் தமது நிலையை காண்பிக்க கவனயீர்ப்பு போராட்டத்தை நேற்று (15) காலை 7.00 மணியளவில் முன்னெடுத்து இருந்தனர்.
தனியார் சிலரால் வீதி அடைக்கப்பட்டதால் மக்கள் குளத்துக்குள்ளால் தமது பயணத்தை மேற்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கையை மிகுந்த சிரமத்தின் மத்தியில் மேற்கொள்கின்றனர். இடுப்பளவுக்குள்ளான குளத்து நீரிற்குள்ளால் பாடசாலைக்குச் செல்லும் துன்பியலான நிலையில் உள்ளதை அவதானிக்க முடிகிறது.
மேலும், சுமார் 60 வருடங்களுக்கு மேலாக பயண்படுத்திவரும் இவ் வீதியை தனியார் சிலர் அது தமது காணி எனத் தெரிவித்து குளத்துடன் இணைத்து வீதியையும் மறித்து வேலியினை அடைத்துள்ளனர்.

இந்நிலையில், தனியார் காணியாளர்கள் வீதியை மறித்தும் குளத்தின் ஒருபகுதியை இணைத்தும் தமது எல்லையை இட்டுள்ளனர். இதனால் சுமார் 35 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் பாரிய வெள்ளத்தின் மத்தியில் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். இவ்வீதியானது சாவகச்சேரி பிரதேச சபை வீதி வரைபடத்தில் குறியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தமது வீதிக்கு உரிய நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
