கூட்டமைப்புக்கும் - இந்தியத் தூதுவருக்கும் இடையே முக்கிய கலந்துரையாடல்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் (R. Sampanthan) தலைமையிலான கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவினருக்கும் இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் (Gopal Bagley) இடையில் இன்று முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பு இன்று (11) வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணிவரை கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரின் இல்லத்தில் இடம்பெற்றது.
இன்றைய சந்திப்பில் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் (Charles Nirmalanathan) கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவரும், வெளிநாட்டுக்கான தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டுள்ள காரணத்தால் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரமும், (Govinthan Karunakaran) உறவினரின் மரணவீட்டுக்குச் சென்ற காரணத்தால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கமும் கலந்துகொள்ளவில்லை.
இதேவேளை, கூட்டமைப்பின் ஏனைய ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் (Mavai Senathirajah) இன்று கலந்துகொண்டனர்.
குறித்த கலந்துரையாடலில் போது வடக்கு, கிழக்கின் தற்போதைய நிலைமை, இந்தியாவின் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், மாவட்ட ரீதியிலான தனித்தனியான துரித அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் நீண்டகால அபிவிருத்தி நலத்திட்டங்கள், இந்திய வீட்டுத்திட்டம், புதிய அரசமைப்பு தொடர்பில் பேசப்பட்டது.
மேலும், இந்திய – இலங்கை மக்களுக்கு இடையிலான தொடர்பாடல், இராமேஸ்வரம் படகு சேவை, பலாலி விமான நிலைய அபிவிருத்தி, காங்கேசன்துறை அபிவிருத்தி குறித்தும் கலந்துரையாடப்பட்டது.