பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கொலை வழக்கு; நீடிக்கும் மர்மம்; போக்கை மாற்றிய பொலிஸார்!
கொழும்பில் கடத்தப்பட்ட நிலையில் உயிரிழந்த ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டர் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் சிஐடியினர் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் இதுவரை 70 பேரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அதேசமயம் சம்பவ தினத்தன்று தினேஷ் ஷாப்டர் பயணித்த காரில் வேறு எவரும் பயணிக்கவில்லை என்பதற்கு சிசிடிவி காட்சிகளில் தெளிவான ஆதாரம் இருந்தாலும், அது தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.
பொரளை மயானத்தில் காருக்குள் மீட்பு
தினேஷ் ஷாப்டர் கடந்த 15ஆம் திகதி தனது மனைவியுடன் பிரித்தானியா செல்வதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் பொரளை மயானத்தில் காருக்குள் கைகள் பெல்ட்டினால் கட்டப்பட்டு கழுத்து கம்பியினால் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரை தேச்சென்ற நிர்வாக அதிகாரி ஒருவர் அவரை மயானத்தில் பணிபுரியும் ஊழியர் உதவியுடன் , கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சுமார் ஐந்து மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்குப் பின்னர் அவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது கார் இருந்த இடம் குறித்து கவனம் செலுத்திய விசாரணை அதிகாரிகள், மூன்று பக்கங்களையும் உள்ளடக்கிய மயானத்தின் “அனாதை பக்கம்“ எனப்படும் பகுதியை அடையாளம் கண்டுள்ளனர்.
விசாரணையில் வெளிவந்த தகவல்கள்
பல நிறுவனங்களின் உரிமையாளரான தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர், பல கோடி ரூபாயை வர்த்தக நடவடிக்கைகளில் முதலீடு செய்தும், எதிர்பார்த்தபடி பணத்தை மீளப் பெற முடியாமல் நாளுக்கு நாள் நஷ்டமடைந்துள்ளார்.
நுவரெலியா பிரதேசத்தில் கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 300 கோடி ரூபா பெறுமதியான காணியொன்று மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் கையளிக்கப்பட்டுள்ளமை, யாழ் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் வர்த்தகத்தில் முதலீடு செய்யப்பட்ட 85 கோடி ரூபா மீளப் பெற்றுக் கொள்ள முடியாமை தொடர்பான சிக்கல் நிலை இருந்ததாக கூறப்படுகின்றது.
அதோடு , கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தாமஸுக்கு கொடுக்கப்பட்ட 160 கோடி ரூபாயில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் பல வியாபாரப் பரிவர்த்தனைகளில் அவருக்கு 2,000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் நெருங்கிய குடும்பத்தினரின் வாக்குமூலத்தின் மூலம் தற்போது தெரியவந்துள்ளது.
அதுஅமட்டுமல்லாது , அவர் வசிக்கும் குருந்துவத்தை, மல் வீதியில் உள்ள வீட்டை விற்பனை செய்வதாக பத்திரிகை ஒன்றில் விளம்பரம் வெளியாகியிருந்ததாக குடும்பத்தின் நெருங்கிய உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்த ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டர் கொலை சம்பவம் இன்னும் நீடிக்கும் மர்மமாகவே உள்ளது.