ரந்தோலி பெரஹெரவை பார்வையிட சென்ற குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
வரலாற்றுச் சிறப்புமிக்க பெல்லன்வில ரஜமஹா விகாரையின் இறுதி ரந்தோலி பெரஹெரவை பார்வையிட சென்ற பெண் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்திற்கு வீதியின் இருபுறமும் மின் விளக்குகளை அலங்கரித்த ஒப்பந்ததாரரின் பாதுகாப்பற்ற செயற்பாடுகளே காரணம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பெல்லன்வில ரஜமஹா விகாரையின் இறுதி ரந்தோலி பெரஹெர கடந்த சனிக்கிழமை இரவு வீதி உலா வந்தது.
வழக்கம் போல் வீதியின் இருபுறமும் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்த நிலையில் பெரஹெரவை காண வந்த பெண் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
இச் சம்பவத்தில் அத்திடிய பிரதேசத்தில் வசித்து வந்த 67 வயதுடைய 2 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிலியந்தலை பிரதேசத்தில் தனியார் ஒப்பந்ததாரர் ஒருவரினால் இந்த மின்விளக்குகள் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மின்சார சபையின் அனுமதியைப் பெறாமல் பிரதான வீதியின் மின் அமைப்பிலிருந்து ஒப்பந்ததாரர் சட்டவிரோதமாகவும் பாதுகாப்பற்றதாகவும் மின்சாரத்தைப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த குற்றச்சாட்டின் பேரில் பொரலஸ்கமுவ பொலிஸார் இன்று (21-08-2023) காலை ஒப்பந்ததாரரை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், ஒப்பந்ததாரருக்கு அன்றைய தினம் உதவியாக இருந்தவர் ஒருவர் தெரிவிக்கையில், மாநகர சபையின் அனுமதி பெற்று முறையான முறைப்படி மின்சாரம் பெறப்பட்டதாக தெரிவித்தார்.