தப்பியோடிய இரட்டைக் கொலை சந்தேக நபர் கைது; மனைவியை கொலை செய்யப் போவதாக அச்சுறுத்தல்
ஹட்டன் – டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, இன்று (27) அதிகாலை தப்பியோடிய சந்தேகநபர், சில மணித்தியாலங்களுக்குள் குறித்த பிரதேச தோட்டம் ஒன்றில் பதுங்கியிருந்த போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டிக்கோயா பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் வயோதிப தம்பதியினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம்
அவர் கடந்த ஜூன் மாதம் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சிறைச்சாலை அதிகாரிகளினால் நேற்று (26) இரவு கண்டி தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
குறித்த சந்தேகநபர் இன்று அதிகாலை வைத்தியசாலையிலிருந்து தப்பியோடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ள சந்தேகநபர், தனது மனைவி தூண்டியதன் பேரில், அவர் பெற்றிருந்த கடன் தொகையொன்றை செலுத்துவதற்காகவே இந்த இரட்டைக் கொலையையும் கொள்ளையையும் செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
அதுமட்டுமன்றி, தான் எப்படியாவது சிறையிலிருந்து விடுதலையாகி வந்த பின்னர், இந்த குற்றத்தைச் செய்ய தன்னைத் தூண்டிய தனது மனைவியையும் நிச்சயமாகக் கொலை செய்யப் போவதாக ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளிடம் அவர் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபரின் இந்த வாக்குமூலத்தை அடுத்து, அவரது மனைவியின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு உடனடியாகச் செயற்பட்ட பொகவந்தலாவ பொலிஸார், இன்று (27) பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு உத்தரவிட்டுள்ளனர்.