திகாம்பரம் மற்றும் வேலுகுமார் அடிதடி முடிந்தபாடில்லை!
இலங்கையின் பிரபல தனியார் தொலைக்காட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்களான திகாம்பரம் மற்றும் வேலுகுமார் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்ந்து இணையத்தில் வைரலாகிய வண்ணம் உள்ளது.
இதுதொடர்பில் ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம், வேலுகுமார் தவறான கருத்துக்கள் மற்றும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் தான் கோபமடைந்து தாக்கியதாக தெரிவித்துள்ளார்.
நேரலையில் அடிதடி
தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் கடந்த பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்துக்கு தெரிவாயகிருந்த பழனி திகாம்பரம் மற்றும் வேலுகுமார் ஆகியோர் அண்மையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்சியொன்றில் பங்குபற்றியிருந்தனர்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவை வெளிப்படுத்தியிருந்த பின்புலத்திலேயே வேலுகுமார் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் இருவருக்கும் இடையில் உக்கிரமடைந்த கருத்து பரிமாற்றம் ஒருகட்டத்தில் மோதலாக மாறியது. இந்த விடயம் இலங்கை அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியதுடன், மலையக மக்கள் இந்த இரண்டு அரசியல்வாதிகள் தொடர்பில் தமது கவலையை வெளிப்படுத்தியிருந்தனர்.
“வேலு குமார் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியதால் தான் நான் கோபமடைந்தேன். பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கும் போது உண்மையான மக்கள் நிதானத்தை இழக்கின்றனர்," என திகாம்பரம் மேலும் குறித்த ஆங்கில ஊடகத்துக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், “ இது முன்கூட்டிய திட்டமிட் சம்பவம்”எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.