ஈரான் சென்றாரா அமைச்சர் உதய கம்பன்விலவின் மனைவி?
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில, மத்திய கிழக்கு நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது ஐக்கிய அரபு இராச்சியம், ஈரான் மற்றும் அஸர்பைஜான் ஆகிய நாடுகளுக்கு அமைச்சர் விஜயம் செய்து பல்வேறு தரப்பினரை சந்தித்து பேச்சு நடத்தி வருகின்றார். இந்த சந்திப்புக்கள் அனைத்திலும் வலு சக்தி அமைச்சின் செயலாளர் திருமதி கே.டி.ஆர் ஒல்காவும் பங்கேற்றிருந்தார்.
குறித்த விஜயம் தொடர்பான விபரங்களை அமைச்சர் உதய கம்மன்பில, தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றார். கடந்த 20ஆம் திகதி வெளியான தென்னிலங்கை பத்திரிகை ஒன்றில் அமைச்சரின் விஜயம் தொடர்பான செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.
அதில் "மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமைச்சர் உதய கம்மன்பிலவின் உத்தியோகபூர்வ விஜயத்தில் அமைச்சின் செயலாளர் திருமதி கே.டி.ஆர் ஒல்காவும் பங்கேற்கின்றார்" என குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த விஜயம் தொடர்பான பிழையான தகவலொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அதாவது "அமைச்சர் உதய கம்மன்பில அவரது மனைவியுடன் ஈரான் சென்றதாகவும், அங்கு அவரது மனைவி தலையில் ஹிஜாப் அணிந்ததாகவும்" சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
மேற்படி விடயம் குறிப்படப்பட்ட புகைப்படம் ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள ஈரானிய எரிபொருள் நிலைய அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.
அந்த புகைப்படத்தில் காணப்படுபவர் வலு சக்தி அமைச்சின் செயலாளர் திருமதி கே.டி.ஆர் ஒல்கா ஆவார். எனினும், அமைச்சின் செயலாளரை , அமைச்சர் உதய கம்மன்பிலவின் மனைவி என குறிப்பிட்டு பல தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
குறித்த புகைப்படம், அமைச்சர் உதய கம்மன்பிலவின் உத்தியோகபூர்வ பேஸ்புகில் வெளியிடப்பட்டுள்ளதுடன் அந்த சந்திப்பில் வலு சக்தி அமைச்சின் செயலாளர் திருமதி கே.டி.ஆர் ஒல்காவும் கலந்துகொண்டார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இதுபோன்று வெளிநாடுகளில் இடம்பெறும் உத்தியோகபூர்வ சந்திப்புக்களின் போது அமைச்சர்களின் உறவினர்கள் யாரும் கலந்துகொள்வதில்லை என்பது பாரம்பரியமாகும்.
அது மாத்திரமல்லாமல் ஈரானிற்குள் நுழையும் அனைத்து பெண்களும் இன, மத, சாதி, என்ற வேறுபாடின்றி தலையினை மூட வேண்டும் என்பதும் அந்நாட்டு சட்டம் என தெரிவிக்கபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
