பிரசித்தி பெற்ற ஆலய புண்ணிய தீர்த்தத்தில் பிணங்கள் மிதந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி
இந்தியாவின் புகழ்பெற்ற புண்ணிய தீர்த்தங்களுள் ஒன்றான தமிழகத்தில் அமைந்துள்ள இராமேஸ்வரம் தீர்த்த கடலில் தம்பதியினர் பிணமாக மிதந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், தமிழகத்தின் கோவை மாவட்டம், பொன்னாபுரம் பகுதியை சேர்ந்தவர் 62 வயது நிறைந்த கோவிந்தராஜ். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களது மகன் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மகன் உயிரிழந்ததால் மன விரக்தியில் இருந்து வந்த அந்த தம்பதியினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் வந்துள்ளனர்.
அப்பொழுது தற்கொலை செய்துகொள்ள எண்ணிய அவர்கள் தங்கள் இருவரது உடல்களையும் துணியால் கட்டிக்கொண்டு கடலில் ஆழமான பகுதிக்கு சென்று தற்கொலை செய்துள்ளனர். அதற்கு முன்பு அவர்கள் தங்களது சொத்தை விற்று, தங்களது மகன் பெயரில் அறக்கட்டளை அமைத்து அதன் மூலம் நலத்திட்ட உதவிகளை செய்யுமாறு உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல்பகுதியில் கோவிந்தராஜ்- தனலட்சுமி தம்பதியினர் பிணமாக மிதந்துள்ளனர். இதனை கண்டு அங்கு புனித நீராடிய பக்தர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவலளிக்கப் பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் உயிரிழந்த தம்பதியினரின் உடல்களை மீட்டு ஆதார் கார்டு மூலம் அவர்களைக் குறித்த தகவல் அறிந்த பொலிசார் உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தம்பதியர் ஒன்றாக உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.