யாழ் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அபிவிருத்தி!
யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கான தாதியர் குடியிருப்பு வளாகத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை (19) பிற்பகல் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெறவுள்ளது.
212 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் போதிய தாதியர் குடியிருப்புகள் இன்மையால் தாதியர் உத்தியோகத்தர்கள் நீண்டகாலமாக மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், அதற்கு தீர்வாக இந்த தாதியர் குடியிருப்பு வளாகத்தை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தாதியர் குடியிருப்புகள்
சுகாதாரத் துறையில் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்வதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ், வடமாகாண சபையின் நிதியைப் பயன்படுத்தி இந்த நிர்மாணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
வைத்தியசாலைகள் மற்றும் ஏனைய சுகாதார நிறுவனங்களின் சேவை வினைத்திறனை அதிகரிப்பதன் மூலம் இலங்கை மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை தொடர்ச்சியாக வழங்குவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வடமாகாண ஆளுநர் உட்பட பிராந்திய அரசியல் பிரதிநிதிகள், மாகாண பிரதம செயலாளரின் உயர் அதிகாரிகள், வைத்தியசாலை ஊழியர்கள் உள்ளிட்டோர் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.