பச்சை குத்துவது தொடர்பில் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க வெளியிட்ட விடயம்
பச்சை குத்துவது என்பது தனிநபர் சுதந்திரம் சார்ந்த விடயம், எதிர்க்கட்சிகள் இதனைப் பெரிது படுத்துவது ஒரு தவறான புரிதல் காரணமாகவே ஆகும் என்று கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் புதன்கிழமை (21) நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சட்ட நடவடிக்கை
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் பச்சை குத்துதல் தொடர்பாக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கையானது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. பச்சை குத்துவது என்பது தனிநபரின் விருப்பம் சார்ந்த விடயமாகும்.
அதனை எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது போல ஒரு தேசிய பிரச்சினையாகவோ அல்லது பெரும் ஆபத்தாகவோ பார்க்க வேண்டியதில்லை. இது ஒரு தவறான விளக்கத்தின் விளைவே தவிர, இதில் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
அரசாங்கம் தற்போது பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான புதிய சட்ட வரைபுகளைத் தயாரித்து வருகிறது.
இந்தச் சட்டங்கள் சர்வதேச தரநிலைக்கு அமையவே உருவாக்கப்படுவதாகவும், குறிப்பாக சிங்கப்பூர் சட்டத்தைப் போன்ற குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை இலக்காகக் கொண்டு இவை வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம் எவரையும் பழிவாங்கவோ அல்லது ஒடுக்கவோ இவ்வாறான சட்டங்களைக் கொண்டுவரவில்லை. அத்துடன்.
பச்சை குத்துபவர்களைக் குறிவைப்பது இதன் நோக்கமல்ல, மாறாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தவே இவ்வாறான நடவடிக்கைகள் தேவைப்படுகிறது.
எனவே,அரசாங்கம் பெற்றுள்ள மக்கள் ஆணையின்படி, நாட்டை ஒரு ஒழுக்கமான மற்றும் அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவது தங்களின் பிரதான நோக்கம் ஆகும்.