ஹிஜாப் அனுமதி மறுப்பு; தேர்வு எழுதாமல் வெளியேறிய மாணவிகள்
மாணவிகள் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியதையடுத்து அம் மாநிலத்தின் யாதகிரி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் தேர்வை புறக்கணித்து 35 மாணவிகள் வெளியேறியுள்ளனர்.
கர்நாடகத்தில் உருவான ஹிஜாப் பிரச்சனை இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. கல்லூரிகளில் விதிக்கப்பட்ட ஹிஜாப் தடையை எதிர்த்து உடுப்பி மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. அத்துடன் முழுவிசாரணை முடிவடைந்த நிலையில் பிப்ரவரி 25 ஆம் திகதி அன்று, திகதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஹிஜாப் என்பது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசிய விஷயமல்ல எனக்கூறிய உயர்நீதிமன்றம், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் எனக்கூறி கர்நாடக அரசின் உத்தரவை உறுதி செய்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்த நிலையில் கல்லூரியில் தேர்வு எழுதாமல் மாணவிகள் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாதகிரி மாவட்டம் சுராப்புரா தாலுகா கெம்பாவியில் அரசு பியூ கல்லூரி உள்ளது. இங்கு தேர்வு நடைபெற்று வருகிறது. இன்று ஹிஜாப் தீர்ப்பை எதிர்பார்த்து மாணவிகள் காத்திருந்தனர்.
தீர்ப்பு வெளியானவுடன் முதலில் 8 மாணவிகள் தேர்வு எழுதுவதை புறக்கணித்து வெளியேறியதை தொடர்ந்து சில மாணவிகள் வெளியேறினர். இது தொடர்பில் கல்லூரி முதல்வர் சகுந்தலா கூறுகையில்,
‛‛உயர்நீதிமன்ற தீர்ப்பை பின்பற்ற வேண்டும் என பொதுவாக அறிவுறுத்தினோம். மேலும் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் அவர்கள் எங்களின் பேச்சை கேட்கவில்லை. ஹிஜாப் அணிந்து வருவோம் என தொடர்ந்து கூறினர். இதையடுத்து மொத்தம் 35 பேர் வெளியேறி சென்றனர். இருப்பினும் சில மாணவிகள் உயர்நீதிமன்ற தீர்ப்பை மதித்து ஹிஜாப்பை அகற்றி தேர்வு எழுதியதாக அவர் தெரிவித்தார்.
மாணவிகள் கூறுகையில், ‛‛ஹிஜாப் தொடர்பான தீர்ப்பு குறித்து பெற்றோருடன் ஆலோசிப்போம். அதன்பிறகு ஹிஜாப் அணியாமல் வகுப்பறைக்கு வருவது குறித்து முடிவு செய்வோம்'' என்றனர்.
அதேவேளை நீதிமன்ற தீர்ப்புக்கு முன்னதாக மாணவிகள் கூறும்போது ‛‛எங்களுக்கு படிப்பு எவ்வளவு முக்கியமோ அதேபோன்று ஹிஜாப்பும் முக்கியம். ஹிஜாப்பை அகற்ற மாட்டோம். ஹிஜாப் அணிந்து தான் தேர்வு எழுதுவோம். ஹிஜாப்பை அகற்றி தேர்வு எழுத கூறினால் வெளியேறுவோம் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.