நாட்டில் தீவிரமடையும் டெங்கு ; கடந்த 5 நாட்களில் 5,600க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
இலங்கையில் டெங்கு காய்ச்சலின் பரவல் நடப்பு ஆண்டில் கணிசமாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
ஞாயிற்றுக்கிழமை (05) நள்ளிரவு வரையிலான தரவுகளுக்கமைய, நாடு முழுவதும் 61,060 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 39 மரணங்களும் பதிவாகியுள்ளன. தற்போது மரண வீதம் 0.06 சதவீதமாகக் காணப்படுகிறது.

அபாய வலயங்கள்
மாதாந்த ரீதியில் கடந்த ஜூன் மாதத்தில் மாத்திரம் 21,546 நோயாளர்கள் பதிவாகியுள்ள அதேவேளை, ஜூலை மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் மட்டும் 5,673 நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாகாண ரீதியில் அவதானிக்கும் போது, மேல் மாகாணம் 32,054 நோயாளர்களுடன் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்தப்படியாக தென் மாகாணத்தில் 9,674 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் 12,445 பேரும், கம்பஹாவில் 12,282 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் 142 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு பரவும் அதிவேக அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும் 26 ஆவது வாரத்தின் நள்ளிரவு சராசரி கணக்கெடுப்பின்படி வாராந்த தொற்று பாதிப்பு 2,604 ஆக உயர்ந்துள்ளது.