இலங்கையில் மின்னல் வேகத்தில் பரவும் டெங்கு
இலங்கையில் கொரோனா பரவலுக்கு மத்தியில் தற்போது டெங்கு பரவல் வேகமெடுத்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2022 ஆம் ஆண்டின் முதல் ஐந்து நாட்களில் 1,227 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், டெங்குவை உண்டாக்கும் நான்கு முக்கிய வைரஸ்களில் மூன்றாவது வைரஸானது டெங்கு நோயாளர்கள் இலங்கையில் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக வைத்தியர் அனோஜா தீரசிங்க தெரிவித்தார். இந்நிலைமையை கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இத்திட்டம் ஜனவரி 04ஆம் திகதி முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதற்கு முப்படையினர், காவல்துறை மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரின் ஒத்துழைப்பும் கிடைத்தது.
தற்போது கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, குருநாகல், புத்தளம், காலி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, இரத்தினபுரி மற்றும் டெங்கு பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.