யாழில் சடுதியாக அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை!
யாழில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பு ஆண்டு (2022) டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து காணப்படுவதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (27-12-2022) நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெரும் தொற்று காரணமாக மாகாணங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்டு போக்குவரத்து காரணமாக கடந்த இரண்டு வருடங்களிலும் மிகக் குறைந்தளவு டெங்கு நோயாளர்களே இனங்கப்பட்டிருந்தார்கள்.
ஆனால், இந்த வருடத்தில் இன்று வரையான காலப்பகுதியிலே யாழில் 3294 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் இதுவரை 9 மரணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வருடத்தின் அக்டோபர் நவம்பர் டிசம்பர் மாதங்களில் ஒப்பிட்டு பார்க்கும்போது நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பதை நாங்கள் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
ஒக்டோபர் மாதத்தில் யாழில் 237 நோயாளர்களும் நவம்பர் மாதத்தில் 367 நோயாளர்களும் டிசம்பர் மாதத்தில் 570 நோயாளர்களும் டெங்கு நோயுடன் இனங்காணப்பட்டுள்ளார்கள்.
குறிப்பாக, கடந்த இரண்டு வார கால பகுதியிலே சடுதியான அதிகரிப்பை நாங்கள் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
கடந்த பல வருடங்களிலே சில வருடங்களில் டெங்கு நோய்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தாலும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது.
ஆனால் இந்த வருடத்தில் இதுவரை 9 உயிரிழப்புகள் காணப்படுவது மிக கூடிய ஒரு அதிகரிப்பதாக காணப்படுகின்றது - என்றார்.