டெங்கு புகை விசிறல் நடவடிக்கையால் காத்திருக்கும் பாதிப்பு
டெங்கு கொசுக்களை ஒழிப்பதற்காக நடத்தப்படும் புகை விசிறல் செயல்முறை ஒரு வெற்றிகரமான நடவடிக்கை அல்ல என்றும், இதனால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொசுவின் வாழ்க்கை வட்டத்தில் முட்டை, குடம்பி, கூட்டுப்புழு மற்றும் முதிர்ந்த கொசு என நான்கு நிலைகள் உள்ளன. ஆனால், புகை விசிறல் மூலம் முதிர்ந்த கொசுக்கள் மட்டுமே அழிக்கப்படுகின்றன.

டெங்கு ஒழிப்பு
இதனால் டெங்குவை முழுமையாக ஒழிக்க முடியாது என கூறியுள்ளது. அத்துடன்,ஒரு சுற்று புகை விசிறல் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு 20,000 ரூபாய்க்கும் அதிகமான பணம் செலவிடப்படுவதாக தெரிவித்துள்ளது.
இந்த பூச்சிக்கொல்லி நாசினிகள் காரணமாக கொசுக்கள் மட்டுமன்றி, மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் தேனீக்கள், தட்டாரப்பூச்சிகள் போன்ற நன்மை செய்யும் பூச்சியினங்களும் இறப்பதால் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், டெங்கு நோய் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ள நிலையில் நாடு முழுவதும் இதுவரை 52,068 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.