நாட்டில் டெங்கு மரணங்கள் உயர்வு ; அச்சத்தை ஏற்படுத்தும் நோயாளர் எண்ணிக்கை
இலங்கையில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 67,174 ஆக உயர்வடைந்துள்ளது.

வைத்தியசாலைகளில் நெருக்கடி
ஜூலை மாதத்தின் கடந்த 9 நாட்களில் மாத்திரம் 10,685 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை (10) ஒரே நாளில் மாத்திரம் சுமார் 1,110 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் இந்த மோசமான சூழ்நிலை காரணமாக, நாட்டின் பல பிரதான வைத்தியசாலைகள் தங்களது அதிகப்படியான கொள்ளளவை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இதனால் வைத்தியசாலைகளில் கடுமையான நெருக்கடியும் நெரிசலும் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.