டெங்கு எச்சரிக்கை; 538 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அதிஅபாய வலயங்களாக அறிவிப்பு
நாடு முழுவதும் நிலவும் டெங்கு அபாயத்தைக் கருத்திற்கொண்டு, 2026 ஜூன் மாதத்திற்கான அதிக அவதானமிக்க கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் பட்டியலை சுகாதாரப் பிரிவினர் வெளியிட்டுள்ளனர்.
நடப்பாண்டில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

47,530 டெங்கு நோயாளர்கள்
நேற்று (22) நள்ளிரவு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, நாட்டில் மொத்தமாக 47,530 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் ஜூன் மாதத்தில் மட்டும் 13,689 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந் நிலையில் , 14 மாவட்டங்களுக்குட்பட்ட 331 சுகாதார உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள 538 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள், டெங்கு அதிஅபாய வலயங்களாக இனங்காணப்பட்டுள்ளன.
இதில் அதிக அவதானமிக்க மொத்தம் 14 மாவட்டங்கள், 331 சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் பிரிவுகள் மற்றும் 538 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இனங்காணப்பட்டுள்ள இந்த பிரிவுகளில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் விசேட ஆய்வுகள், புகையூட்டல் நடவடிக்கைகள் மற்றும் வளாகப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்துமாறும் சுகாதாரப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.