பலத்த பாதுகாப்புடன் வாக்கு பெட்டிகள் அனுப்பி வைப்பு
இலங்கையில் 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் நாளை(21) இடம்பெறவுள்ள பலத்த பாதுகாப்புடன் வாக்கு பெட்டிகள் வடக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை சனிக்கிழமை (21) காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெறவுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில்137 வாக்களிப்பு நிலையங்கள்
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக முல்லைத்தீவு மாவட்டத்தில்137 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்கு பெட்டிகள் முல்லைத்தீவு மகா வித்தியாலயத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட இலங்கை ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான நாடளாவிய ரீதியில் இடம்பெற இருக்கின்ற தேர்தலுக்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 137 வாக்களிப்பு நிலையங்களிற்கே இவ்வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இம்முறை தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 86,889 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள நிலையில் அவர்கள் வாக்களிப்பதற்குரிய 137 நிலையங்களுக்கும் முல்லைத்தீவு மகா வித்தியாலயத்திலிருந்து இன்று (20.09.2024) காலை 7 மணி முதல் வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் 152 வாக்களிப்பு நிலையங்கள்
அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் 152 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறித்த நிலையங்களுக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் இன்று (20) காலை 7 மணிமுதல் எடுத்து செல்லப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தின் வாக்கெண்ணும் மத்திய நிலையமாக செயற்ப்பட்டுவரும் சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியிலிருந்து குறித்த வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வாக்களிப்பு நிலையங்களிற்கு பொலிஸாரின் பாதுகாப்புடன் பேருந்துகளின் மூலம் எடுத்துச்செல்லப்பட்டுள்ளன.
இதேவேளை வவுனியாவில் 128,585 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளதுடன் தேர்தல் கடைமைகளுக்காக பொலிஸார் உட்பட 25,00 ற்கும் மேற்ப்பட்ட அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி மாவட்டத்தில் 108 வாக்களிப்பு நிலையங்கள்
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப்பெட்டிகள் இன்று (20) காலை முதல் எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தில் ஒழுங்குபடுத்தப்பட்ட 108 வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் 40 பேருந்துகளில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாளை சனிக்கிழமை (21) நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடெங்கும் மிகத் துரிதமாக இடம்பெற்று வருகின்றன.