மன்னாரில் தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்புகள்!
மன்னார் மாவட்டத்தில் மாந்தை மற்றும் நானாட்டான் பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் மேய்ச்சல் தரை பிரச்சினை நீண்ட நாட்களாக இருந்துவரும் நிலையில், அண்மைக்காலமாக மேய்ச்சல் தரை இன்றி அதிகளவான கால்நடைகள் உயிரிழந்து வருகின்றன.
குறிப்பாக மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நாயாற்றுவெளி பகுதியில் அதிகளவான கால்நடைகள் மேய்ச்சலுக்காக கொண்டு செல்லப்படுகின்ற நிலையில், சீரற்ற வானிலையுடனான அதிக பனி காரணமாக அதிகமான மாடுகள் உயிரிழக்கின்றன.
கால்நடைகள் உயிரிழப்பு
அதேவேளை, அதிகளவு மாடுகள் ஒரே பகுதிகளில் மேய்வதால் பட்டினியால் உடல் மெலிந்து இறந்துள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த உயிரிழப்புகளால் வாழ்வாதாரத்தை இழந்த கால்நடை மேய்ப்பாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
மன்னார் மாவட்ட செயலகத்தினால் மேய்ச்சல் தரைக்கு என பல வருடங்களுக்கு முன் ஒதுக்கப்பட்ட பல ஏக்கர் காணிகள் இன்றும் விடுவிக்கப்படாதுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் பொருத்தமற்ற இடங்களில் மேய்ச்சல் நடவடிக்கைகளுக்கு மாடுகளை கொண்டுசெல்வதால், அவை உயிரிழக்கின்ற அவலம் அதிகரித்துள்ளது.