சந்நிதியான் திருவிழாவில் பகல் கொள்ளை; ஹெல்மெட் பாதுகாப்பதற்கு 50 ரூபாய்
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் வருடாந்த மகோற்சவப் பெருவிழா இடம்பெற்று வருகிறது.
மாகோற்சப பெருவிழாவின் சப்பறத் திருவிழா இன்று (5) மாலையும், நாளை காலை தேர்த்திருவிழாவும், நாளை மறுதினம் காலை தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
ஹெல்மெட் பாதுகாப்பதற்கு 50 ரூபாய்
தொண்டமனாறு தண்ணீர் தாங்கி அருகே உள்ள மோட்டார் சைக்கிள் பாதுகாப்பு நிலையத்தில் தலைக்கவசம் (ஹெல்மெட்) ஒன்றை பாதுகாப்பதற்கு 50 ரூபாய் அறவிடப்படுகிறது.
கட்டணம் அதிகம் தொடர்பில் பொதுமக்கள் மோட்டார் சைக்கிள் பாதுகாப்பு நிலைய ஊழியரிடம் வினவிய போது அவர் வல்வெட்டித்துறை நகரசபையினர் தான் 50 ரூபாய் அறவிட சொன்னதாக குறிப்பிட்டு பொதுமக்களிடம் முரண்பட்டிருந்தார்.
இது தொடர்பில் வல்வெட்டித்துறை நகரசபை உப தவிசாளர் கூறுகையில்,
குறித்த பாதுகாப்பு நிலையம் தொடர்பில் ஏற்கனவே ஐந்தாறு முறைப்பாடுகள் கிடைத்து தங்களது வருமான வரி உத்தியோகத்தர் தலையிட்டு ரிக்கெட்டுக்களை பறிமுதல் செய்து எச்சரித்ததாகவும் குறிப்பிட்டார்.
வாகனப் பாதுகாப்பு நிலையத்துக்கு நகரசபை சார்பில் ஒரு மோட்டார் சைக்கிளுக்கு 40 ரூபாயும், ஒரு ஹெல்மெட்டுக்கு 20 ரூபாய் அறவிடுமாறு உத்தரவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
இப்போது கிடைத்துள்ள முறைப்பாடு தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்ட அவர் குறிக்கப்பட்ட தொகையை தாண்டி பொதுமக்களிடம் கட்டணங்கள் அறவிட்டால் ஆலயத்தின் முன்னுள்ள வல்வெட்டித்துறை நகரசபையின் உற்சவகால பணிமனையில் முறையிடுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.