பக்கத்து வீட்டுக்காரருக்காக இப்படியா? பெற்ற மகளுக்கு தந்தை அரங்கேற்றிய கொடூரம் ; அதிர்ச்சி கொடுக்கும் காரணம்
கர்நாடகவில் மகளை வைத்து பக்கத்து வீட்டுக்காரரை பழிவாங்க சொந்த மகளை தந்தை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் கலபுரகி (மாவட்டம்) அருகே கல்லஹங்கரகா கிராமத்தை சேர்ந்தவர் குண்டேராவ் நீராலு (வயது 45), விவசாயி. இவரது மகள் மஞ்சுளா (17). இந்த சிறுமி கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி ஆவார்.

ஊனமுற்ற சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை
குண்டேராவ் நீராலுக்கும், அவரது பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே நிலம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் மஞ்சுளா நேற்று முன்தினம் தூக்கில் தொங்கியுள்ளார்.
அவளது தந்தை, தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக அக்கம்பக்கத்தினரிடம் கூறியுள்ளார். மேலும் சம்பவம் பற்றி அவர் பொலிஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.
இதன்போது அவர் எழுதி வைத்திருந்ததாக ஒரு கடிதத்தையும் பொலிஸார் கண்டுபிடித்தனர். அதில், தனது தற்கொலைக்கு பக்கத்து வீட்டுக்காரர் தான் காரணம். அவர் நிலத்தகராறில் தினமும் தகராறு செய்து மனரீதியாக தொல்லை கொடுத்து வருகிறார் என்று கூறப்பட்டு இருந்தது.
ஆனால் கால் ஊனமுற்ற சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்தது எப்படி? என சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து சம்பவம் பற்றி பொலிஸார் சிறுமியின் தந்தையிடம் விசாரணை நடத்தினர்.
இதில், குண்டேராவ் நீராலுவுக்கும், அவரது பக்கத்து வீட்டுக்காரருக்கும் நிலப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் அவர் தான் பெற்றெடுத்த மகளை கொன்றுவிட்டு, பக்கத்து வீட்டுக்காரர் நிலத்தகராறில் ஈடுபட்டு வருவதால் மனவேதனையில் மஞ்சுளா தற்கொலை செய்ததாக கூறி பக்கத்து வீட்டுக்காரரை சிக்க வைத்துவிடலாம் என திட்டம் தீட்டியுள்ளார்.
அதன்படி சம்பவத்தன்று வீட்டில் வேறுயாரும் இல்லாத சமயத்தில் தான் பெற்றெடுத்த மகள் என்று கூட பாராமல் மாற்றுத்திறனாளியான மஞ்சுளாவை தூக்கில் தொங்கவிட்டு துடிக்க துடிக்க கொன்றுள்ளார்.
பின்னர் மஞ்சுளா எழுதியது போல் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை நாடகமாடியதும் தெரியவந்தது.