அமெரிக்கா, ஜெர்மனி, கனடா நாடுகளில் இருந்து இலங்கை வந்த ஆபத்தான பொருள்!
விமான தபால் சேவை மூலம் கட்டுநாயக்க - சீதுவை பிரதேசத்தில் உள்ள களஞ்சியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட 7 பொதிகளில் இருந்த போதைப்பொருட்கள் , சுங்க மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் இன்று (03) கைப்பற்றப்பட்டுள்ளன.
சுமார் 31 கோடியே இருபது இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களே கைப்பற்றப்பட்டுள்ளன.
7 பொதிகளில் போதைப்பொருள்
இந்த பொதிகள் அமெரிக்கா, ஜெர்மனி, கனடா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இலங்கையின் கொழும்பு, பாணந்துறை, வத்தளை, இராஜகிரிய மற்றும் மொரட்டுவை ஆகிய பகுதிகளில் உள்ள முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுங்க மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த முகவரிகளை ஆய்வு செய்தபோது, அவை போலி முகவரிகள் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுங்க மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
23,642 போதை மாத்திரைகள், ஒரு கிலோ 445 கிராம் கொக்கேயின், 993 கிராம் மென்டி மற்றும் 098 கிராம் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.