வலுவிழந்த 'டிட்வா' புயல் ; வானிலை மாற்றத்தில் புரியாத புதிர்
'வங்கக்கடலில் உருவான, 'டிட்வா' புயல் நகரும் வேகம் குறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, வலுவிழந்தது. இதனால், தமிழகத்தில் வடமாவட்டங்களுக்கான கனமழை அபாயம் விலகியது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரிக்கு தென்கிழக்கே, 110 கி.மீ., மற்றும் வேதாரண்யத்துக்கு வடகிழக்கில், 140 கி.மீ., சென்னைக்கு தெற்கு, தென்கிழக்கில், 180 கி.மீ., தொலைவில், இந்த புயல் நிலை கொண்டிருந்தது. இது, தமிழக வட மாவட்டங்களுக்கு இணையாக, வடக்கு திசையில் நகர்ந்து கொண்டிருந்தது.

வலுவிழக்கும் இதன் காரணமாக, தமிழகத்துக்கும், புயலுக்கும் இடைப்பட்ட தொலைவு, 30 கி.மீ., வரை குறையக்கூடும். இதனால், 'டிட்வா' புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது, பின் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவிழக்க வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வரும் 6ஆம்ம் திகதி வரை, சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும், சில இடங்களில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இன்று சூறாவளிக்காற்று வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.