இலங்கையை உருக்குலைத்த டித்வா புயல்; 30 லட்சம் கோழிகள் உயிரிழப்பு
அனர்த்த நிலை காரணமாக நாடு முழுவதும் உள்ள கோழிப் பண்ணைகளில் சுமார் 30 லட்சம் கோழிகள் உயிரிழந்ததால், உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்களுக்கு 7 பில்லியன் ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர் அன்டன் அப்புஹாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

50 ரூபாவைத் தாண்டி உயர்வதை தவிர்க்க முடியாது
முட்டை உற்பத்தி செய்யும் பண்ணைகளில், தெதுரு ஓயாவை அண்மித்த பண்ணைகள் அதிகபட்ச சேதத்தை சந்தித்துள்ளதுடன், அங்கு இருந்த சுமார் 15 லட்சம் கோழிகள் உயிரிழந்துள்ளன.
தாழ்நிலப் பகுதிகளில் உள்ள பண்ணைகளில் சுமார் 50 சதவீதம் அழிந்துள்ள நிலையில், அவிசாவளை சாலாவ பிரதேசப் பண்ணைகளில் சுமார் 7 லட்சம் கோழிகள் உயிரிழந்துள்ளன.

தாய் கோழிகளில் 25,000 கோழிகள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளன. இந்த பெரும் இழப்பின் காரணமாக, தற்போது முட்டையொன்றின் மொத்த விலை 37 ரூபாவாகவும், சில்லறை விலை 40 ரூபாவாகவும் உயர்ந்துள்ளது
அத்துடன், பண்டிகைக் காலத்தை நெருங்கும் போது, முட்டையொன்றின் மொத்த விலை 45 ரூபாவாகவும், சில்லறை விலை 50 ரூபாவைத் தாண்டியும் உயர்வதை தவிர்க்க முடியாது என்றும் எச்சரித்துள்ளார்.
தற்போதுள்ள சூழலில், பண்ணைகளில் உயிருடன் உள்ள விலங்குகளிடையே நோய் பரவுவதைத் தடுக்க அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.