வெள்ள அனர்த்தம்; நாடு முழுவதும் 10,793 பேர் பாதிப்பு
புத்தளம் மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் 2,854 குடும்பங்களைச் சேர்ந்த 10,793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் வை.ஐ.எம். சில்வா தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தின் 12 பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள 73 கிராம சேவகர் பிரிவுகளில் இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, வண்ணாத்தவில்லு பிரதேச செயலகப் பிரிவில் அதிகளவான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அங்கு ஐந்து கிராம சேவகர் பிரிவுகளில் 1,301 குடும்பங்களைச் சேர்ந்த 5,078 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் பிரதேச செயலகப் பிரிவில் 746 குடும்பங்களைச் சேர்ந்த 2,964 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மஹாவெவ, வென்னப்புவ, நாத்தாண்டிய, சிலாபம், கற்பிட்டி, மாதம்பை, ஆராச்சிக்கட்டுவ, கருவலகஸ்வெவ, மஹாகும்புக்கடவல மற்றும் நவகத்தேகம உள்ளிட்ட பகுதிகளிலும் வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதேவேளை, மாதம்பை - வெள்ளவாகர பகுதியில் வெள்ள நீரில் மூழ்கி 56 வயதுடைய அமுவல தேவகே பிரேமசிறி என்பவர் உயிரிழந்துள்ளார். மேலும், மாவட்டத்தில் இரண்டு வீடுகள் முழுமையாகவும், 156 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
வெள்ள அபாயத்தைக் குறைக்கும் அவசர நடவடிக்கையாக, மஹாவெவவிலுள்ள தல்வில முகத்துவாரமும் வென்னப்புவவிலுள்ள கம்மல முகத்துவாரமும் திறக்கப்பட்டு, வெள்ள நீரை கடலுக்குள் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தொடர்ந்து மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், புத்தளம் மாவட்டத்தில் அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளர்கள், அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.