வட மாகாணத்தில் உச்சம் தொடும் இணையவழி குற்றங்கள் ; நாடாளுமன்றில் வெளியான அதிர்ச்சி தகவல்
வடக்கு மாகாணத்தில் சைபர் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிக அளவில் பதிவாகியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
நாடாளுமன்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு, கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

கணினி குற்றங்கள்
ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகுவதாகவும் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் இவ்வாறான சைபர் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிக அளவில் பதிவாகியுள்ளதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அதன்படி வடக்கு மாகாணத்தில் பதிவான சைபர் குற்றங்களில் 2020: 24 குற்றங்களும், 2021: 577 குற்றங்களும், 2022: 654 குற்றங்களும், 2023: 472 குற்றங்களும், 2024: 1,539 குற்றங்களும், மேலும், 2025 ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை சைபர் குற்றங்கள் தொடர்பாக 2,368 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதேபோல், நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள பொலிஸ் தலைமையகங்களில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் கணினி குற்ற விசாரணை உப பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சபையில் வெளிப்படுத்தினார்.