காலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை நீர் குடிப்பதால் இத்தனை நன்மைகளா?
நமது தினசரி சமையலில் தாளிப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான பொருள் தான் கறிவேப்பிலை இந்த கறிவேப்பிலை ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது.
ஏனெனில் இந்த சிறிய இலையில் ஏராளமான மருத்துவ பண்புகள் நிறைந்துள்ளன. எனவே இந்த கறிவேப்பிலையை தினசரி உணவில் சேர்த்து வரும் போது, அதில் உள்ள சத்துக்களால் உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும்.
காலையில் எழுந்ததும் காபி, டீ-க்கு பதிலாக கறிவேப்பிலை நீரை குடித்து வந்தால், பலவிதமான நன்மைகளைப் பெறலாம். இப்போது கறிவேப்பிலை நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என நாம் இங்கு பார்ப்போம்.
எடை இழப்புக்கு உதவும்
தற்போது உடல் எடையைப் பராமரிப்பது என்பது சவாலான ஒன்றாக உள்ளது. ஆனால் கறிவேப்பிலை நீரை குடித்து வந்தால், எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். ஏனெனில் இது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களைக் குறைக்க உதவுகிறது. அதோடு இது உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, கலோரிகளை எரிக்கும் செயல்முறையை வேகப்படுத்துகிறது. மேலும் இது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றி, செரிமான மண்டலத்தை மேம்படுத்தி, எடை இழப்புக்கு உதவுகிறது.
செரிமான மண்டலம் வலுவடையும்
தற்போது அசிடிட்டி, மலச்சிக்கல், அஜீரண கோளாறு போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளால் நிறைய பேர் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். கறிவேப்பிலையில் உள்ள மருத்துவ பண்புகள் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. அதுவும் கறிவேப்பிலை நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றி குடிக்கும் போது, அது வயிற்றில் வாய்வு உருவாவதைக் குறைக்கிறது, அசிடிட்டியில் இருந்து நிவாரணமளிக்கிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது. அதோடு இது வயிற்று பண்ணைக் குறைக்கிறது மற்றும் குடல் வீக்கத்தைக் குறைக்க உவுகிறது.
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்
கறிவேப்பிலை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவி புரியும். இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது கார்போஹைட்ரேட் உறிஞ்சுதலை மெதுவாக்கி, இரத்த சர்க்கரை சட்டென்று உயர்வதைத் தடுக்கும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள உட்பொருட்கள் இன்சுலின் சென்சிடிட்டிவிட்டியை ஊக்குவித்து, டைப்-2 சர்க்கரை நோயைப் பராமரிக்க உதவுகிறது.
கொலஸ்ட்ராலைக் குறைக்கும்
கறிவேப்பிலையை தினசரி உணவில் சேர்த்து வருவதன் மூலம், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, அதன் மூலம் இதய நோயின் அபாயம் குறையும். இது தவிர, இதில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் போன்றவை ஏராளமான அளவில் உள்ளன. இதில் உள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபின் உற்பத்திக்கு அத்தியாவசியமானது. அதே சமயம் ஃபோலிக் அமிலம் இரும்புச்சத்தை உறிஞ்ச உதவி புரிகிறது.
சருமம் மற்றும் முடிக்கு நல்லது
கறிவேப்பிலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் அதிகம் உள்ளன. இந்த கறிவேப்பிலையின் நீரை குடித்து வந்தால், அது உடலை உள்ளிருந்து சுத்தப்படுத்தி, சருமத்தை பொலிவாக வெளிக்காட்டும். மேலும் இந்த கறிவேப்பிலை முகப்பரு வருவதைக் குறைத்து, சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவுகிறது. முக்கியமாக கறிவேப்பிலை தலைமுடி உதிர்வதையும், முடி நரைப்பரையும் தடுக்க பெரிதும் உதவி புரிகிறது.