'தற்போதைய அரசாவது சுவாதி கொலை வழக்கின் மர்மத்தைக் கண்டரயிவேண்டும்'...ராம்குமார் தந்தை பரபரப்பு பேட்டி
தமிழகத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட வழக்கு தான் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இடம்பெற்ற சுவாதி கொலை வழக்கு.
இந்த படுகொலையை சுவாதி தனது காதலை ஏற்க மறுத்ததால் ராம்குமார் என்பவர் கொலை செய்ததாக சிசிரிவி காட்சிகளை ஆதாரமாக கொண்டு பொலிஸார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் திடீரென சில நாட்களில் மின் கம்பியைப் கடித்து தற்கொலை செய்து கொண்டார் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவரது தற்கொலையில் மர்மம் நிலவியது அதுமட்டுமின்றி ராம்குமார் தற்கொலை விடயத்தில் பொலிஸார் மீது சந்தேகிக்கப்பட்டது.
மேலும் மனித உரிமை ஆணையம் சார்பில் ஆஜரான அரசு வைத்தியர்கள் கொடுத்த வாக்குமூலத்தில், ராம்குமார் மின்கம்பியை கடித்து தற்கொலை செய்து கொள்ளவில்லை என வாக்குமூலம் அளிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதனைப்பற்றி ராம்குமாரின் தந்தை தற்போது பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது,
"ராம்குமார் உயிரிழந்த சுமார் 5 வருஷமாச்சு ஆனால் இன்னும் எங்களது குடும்பம் அவனது நினைவாலே துவண்டு கிடக்கிறது. எனது மனைவியோ மகனை நினைத்து அழுவதா நாட்களே இல்லை. எங்கள் திருமணம் நடைபெற்று சுமார் 7 வருடம் தவமிருந்து பெற்ற மகன் தான் ராம்குமார். அதன் பிறகு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். எங்களுக்குனு இருந்த ஒரே மகனை இந்த காவல்துறை அநியாயமா கொலை செய்துவிட்டது.
தற்போது வரையில் எங்கள் குடும்பம் துன்பத்தில் தான் வாடி வருகிறது. இந்த துயரமான நாட்களிலும் எங்களுக்கு ஆறுதல் தருகிற ஒரே விடயமாக அமைந்தது ராம்குமாரின் மூத்த சகோதரிக்கு நடைபெற்ற திருமணம் தான், தற்போது எங்களுக்கு பேரப்பையன் பிறந்துள்ளான். எனது மகனே எனக்கு பேரக்குழந்தையாக பிறந்துள்ளதாக தான் நான் பார்க்கிறேன். தற்போது நான் ஓய்வு பெற்றுவிட்டேன்.எனது இரண்டாவது மகள் காளீஸ்வரி தான் தற்போது வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்துக் கொள்கிறார்.
அவளுக்கும் ஒரு கல்யாணம் பண்ணி வச்சிட்டா எனக்கு சற்று நிம்மதி அளிக்கும்" தொடர்ந்து பேசிய ராம்குமாரின் தந்தைக் கூறியதாவது, " பொலிஸார் மற்றும் அரசாங்கம் இணைந்து தான் எனது மகனை கொலை செய்துவிட்டனர். உண்மை என்னவென்று மருத்துவர்கள் தெரிவிச்சுட்டாங்க. அவங்களுக்கு பொய் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.
எங்களுக்கு ஆதரவா பேசி அவங்களுக்கு என்ன ஆதாயம் கிடைக்கப்போகிறது. கடந்த ஆட்சியில் இடம்பெற்ற இந்த கொலை சம்பவத்தில் முறையான விசாரணைகள் நடத்தப்படவில்லை. தற்போது இடம்பெற்றுள்ள ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தான் இந்த வழக்கில் முன்னேற்றம் காணப்படுகிறது. தற்போதைய திமுக அரசாவது இந்த கொலை வழக்கின் உண்மையைக் கண்டறிய வேண்டும் .இறந்த சுவாதியும் எனது மகள் மாதிரி தான்.
சுவாதி கொலை வழக்கில் நியாயம் கிடைத்து எனது மகன் நிரபராதி என நிரூபணமாக வேண்டும் . அதுமட்டும் தான் எங்களது விருப்பம். எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை சுவாதியை கொலை செய்தது எனது மகன் இல்லை என்பதை நிரூபிக்க இறுதிவரை போராடுவேன்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.