உச்சத்தைத் தொடும் மசகு எண்ணெய் விலை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் விலையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அதேவேளை, இயற்கை எரிவாயுவின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. உலகளாவிய எரிசக்தி சந்தை நிலவரப்படி, WTI ரக மசகு எண்ணெய் (West Texas Intermediate) பீப்பாய் ஒன்றின் விலை 111.5 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
அதேவேளை, சர்வதேச ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 109 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக விநியோகச் சங்கிலியில் ஏற்படக்கூடிய தடைகள் குறித்த அச்சமே இந்த விலை அதிகரிப்புக்கு பிரதான காரணமாகக் கருதப்படுகிறது.
மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ள போதிலும், இயற்கை எரிவாயுவின் (Natural Gas) விலையில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, அதன் விலை 2.800 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த எரிசக்தி விலை மாற்றங்கள், இறக்குமதி நாடுகளின் பொருளாதாரத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.