வடக்கு மாகாணத்திற்கு இரண்டு ஆளுநர்கள்! வெடித்தது புதிய சர்ச்சை?
வட மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக செயற்பட்டுவந்த ஜீவன் தியாகராஜாவின் பெயர், வட மாகாண ஆளுநர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
அதன் பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை, தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து அவர் விலகியிருந்தார். இது இவ்வாறிருக்கையில், வட மாகாண ஆளுநரான பீ.எஸ்.எம்.சார்ள்ஸ், நேற்றுக் காலை கொழும்பு, கல்கிசையில் உள்ள, வட மாகாண ஆளுநரின் கொழும்பு காரியாலயத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்தினார்.
இதன்போது, வட மாகாண சபைக்குட்பட்ட பாடசாலைகளைத் திறப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எனினும், தாம் வட மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவது தொடர்பான எவ்வித கருத்துகளையும் அவர் வெளியிட்டிருக்கவில்லை. இந்த நிலையில், ஜீவன் தியாகராஜா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்ததையடுத்து.
இது குறித்து கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்த வட மாகாண ஆளுநரின் இணைப்பதிகாரி, இவ்வாறான பதவி மாற்றம் குறித்து தமது அலுவலகத்துக்கோ, ஆளுநருக்கோ எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்புகளும் கிடைக்கப்பெறவில்லையெனத் தெரிவித்தார்.
இதன்போது, அவர் மேலும் குறிப்பிடுகையில், வட மாகாண ஆளுநராக தொடர்ந்தும் பீ.எஸ்.எம்.சார்ள்ஸே செயற்பட்டுவருவதாக தெரிவித்தார். கடந்த 2019 டிசெம்பர் 30 ஆம் திகதி பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் வட மாகாண ஆளுநராக பதவியேற்றார்.
பிரபல நிர்வாக அதிகாரியான இவர், இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் செயற்பட்டுள்ளதுடன், சுகாதார அமைச்சின் செயலாளராகவும் குறுகிய காலம் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.